
கோயில் கும்பாபிஷேகம், திருவிழாக்கள் இந்த ஆண்டு முழுவதும் தடை
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்ந்த திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாக்கள் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை இந்த ஆண்டு முழுவதும் தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக தற்போது திருக்கோயில்களில் வழக்கமான பூஜைகள் அர்ச்சகர்களால் மட்டும் நடத்தப்படுகிறது. சாமி தரிசனத்துக்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும், விசேஷ பூஜைகளுக்கும் என மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில்களை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு திறக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. அதை ஏற்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளதால் அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. இப்போதைக்கு கோயில்களை திறப்பது இல்லை என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அனைத்து கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் இந்த ஆண்டு முழுவதும் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் நடைபெறும் அனைத்துவிதமான கோயில் திருவிழாக்களுக்கும் தடை விதிக்கவும், பொதுமக்கள் லட்சக்கணக்கில் கூடும் குலசேகரப்பட்டினம் தசரா மற்றும் திருச்செந்தூர் சூரசம்ஹார விழா உட்பட அனைத்து மக்கள் கூடும் விழாக்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவிழாவின்போது நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மேளதாள நிகழ்ச்சிகளுக்காக யாருக்கும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குலதெய்வ வழிபாடு செய்வதாக இருந்தாலும் கூட்டம் சேருவதாக இருந்தால் அதற்கு அனுமதியில்லை. அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகமும் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
அதே போல் கோயில்களில் நடத்த திட்டமிட்டிருக்கும் திருமண நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாக இருந்தால் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும்.
இவ்விதிகளை மீறும் திருக்கோயில் நிர்வாகி மற்றும் அர்ச்சகர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
For advertisement
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!